Home Srilanka எரிபொருள் கையிருப்பினை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

எரிபொருள் கையிருப்பினை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0

நாட்டிலுள்ள சில எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் விலை குறைப்புக்களை எதிர்பார்த்து முற்பதிவுகளை தாமதிக்கின்றனர். அதன் காரணமாகவே சில இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களும் 50 வீத எரிபொருள் கையிருப்பினை பேண வேண்டும் என்பது கட்டாயமாகும். எனவே இதனைப் பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார். புதன்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனையடுத்து வியாழக்கிழமை (01) சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து அது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் , லங்கா ஐ.ஓ.சி. என்பவற்றிடம் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை.

எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்த்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் முற்பதிவுகளை வழங்காமையே தட்டுப்பாட்டுக்கான காரணமாகும்.

எவ்வாறிருப்பினும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத கையிருப்பினை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு குறைந்தபட்ச கையிருப்பினை பேணாத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் உரிமத்தை மறுபரிசீலனை செய்து அவற்றை இரத்து செய்யுமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை 122 769 மெட்ரிக் தொன் டீசல் , 5739 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் , 92 ரக பெற்றோல் 56 979 மெட்ரிக் தொன் , 95 ரக பெற்றோல் 2318 மெட்ரிக் தொன் , ஜெட் ஏ1 42 625 மெட்ரிக் தொன் கையிருப்பிலுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version