இலங்கைக்கு மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு இந்த வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இருப்பினும் கடந்த கால அரசாங்கங்கள் அம்மக்களுக்கு வாக்காளர் அந்தஸ்தினை மாத்திரமே வழங்கியுள்ளதே தவிர முழுமையான இலங்கைக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இனிவரும் காலங்களிலாவது மலையக மக்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கித்து சர அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கித்து சர அமைப்பினால் திங்கள்கிழமை (29) கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கலந்து கொண்ட அந்த அமைப்பின் உறுப்பினரான அருட்தந்தை சக்திவேல் கருத்து தெரிவிக்கையில்,
மலையக மக்கள் இந்த நாட்டுக்கு வருகை தந்து இந்த வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. அவர்கள் பல வருடங்கள் பிரித்தானியரின் ஆதிக்கத்தின் கீழ் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
குறிப்பாக உணவின்றி பட்டினியாகவும், போதிய சுகாதார வசதிகள் இல்லாமலும், வீடுகளுமின்றி பாரிய இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துள்ளனர். அந்த காலப்பகுதியில் அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளார்கள். அவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதை விடுத்து கொலை செய்யப்பட்டார்கள் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.
மலையக மக்கள் அன்று தொடக்கம் இன்று வரையில் அடிமை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மலையக மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்த மக்களும் நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அவர்களின் உரிமைகள் வாக்களிப்பதோடு நிறுத்தப்படாமல் ஏனைய மக்களை போன்று நிம்மதியாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு காணி உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
அரசாங்கம் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு புதிய குடியேற்றங்களை நிறுவுகிறது. இருப்பினும் மலையகத்தில் இதுபோன்றதொரு எந்தவொரு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
மாறாக அவர்களை நாட்டிலிருந்து விரட்டுவதற்கான ஏற்பாடுகளே நடைபெறுகின்றன. இந்த நிலையில் இந்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.