மதவாச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குடாஹல்மில்லேவ கிராமத்தினை சேர்ந்த விவசாயி ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (30) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வயல் நிலத்தை பாதுகாக்க திங்கட்கிழமை (29) இரவு வயலில் தங்கிவிட்டு நேற்று (30) காலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது காட்டு யானையின் பிடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் குடாஹல்மில்லேவ கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 73 வயதுடைய டி.ஜயவர்தன என்பவரே இந்த துரதிஷ்டவசமான விபத்தினை சந்தித்துள்ளார்.
ஹல்மிலேவ என்ற சிறிய கிராமம் தொடர்ந்து காட்டு யானைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.