Home Srilanka Politics மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0

அரசியலமைப்பின் ஊடாக பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும், போசிக்கப்பட வேண்டும் என உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அண்மைகாலமாக அமைப்புக்கள், தனிநபர் என்ற அடிப்படையில் புத்தசாசனத்துக்கு எதிரான கருத்துக்கள் தீவிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

மதங்களை அவமதிக்கும் தரப்பினருக்கு எதிராக ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத முரண்பாடுகள் தோற்றம் பெறாத சூழலை பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும் என அஸ்கிரிய மகா விகாரை தரப்பின் புத்தளம் மகாசபையின் பிரதான சங்க நாயக்கர் ஸ்ரீ மீகட்டுவன்னே சுமித்த தேரர் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸ்மா அதிபருருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், சட்டமாதிபர், புத்தசாசன அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புத்த சாசனத்தையும் பௌத்த மதத்தையும் அவமதிக்கும் வகையிலான கருத்து வெளியிடல் அண்மைக் காலமாக தீவிரமடைந்துள்ளன.

சிங்கள பௌத்த நாடு என்று அடையாளப்படுத்தும் வகையில் பௌத்தர்கள் அதிகமாக வாழும் இந்த நாட்டில் சகவாழ்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு புத்தசாசனம் மற்றும் பௌத்த தேரர்களை அவமதிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

சமூக வலைத்தளங்களில் முறையற்ற கருத்துக்களை குறிப்பிடும் தரப்பினருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வெளியானதை தொடர்ந்து அவர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக மன்னிப்பு கோருகிறார்கள். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.

நடாசா எதிரிசூரிய என்ற கிருஸ்தவ மத பெண் குறிப்பிட்ட கருத்துக்கள் தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புத்தசாசனம், கௌதம புத்தரின் பிறப்பு, சிறப்பு ஆகியவற்றுக்கும், பௌத்த மரபுகளையும் அவர் கடுமையாக விமர்சித்து அவமதித்துள்ளார். அத்துடன் பௌத்த மகளிர் பாடசாலைகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதங்களை தொடர்புப்படுத்தி முரண்பட்ட கருத்துக்களை ஒரு தரப்பினர் குறிப்பிடும் போது பொறுப்பான அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே இந்த பெண்ணுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பௌத்த பிக்குகளாகிய எமக்கு அவரது கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது அமைதியாக இருக்கவும் முடியாது. ஆகவே இந்த பெண்ணுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மதம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சட்டத்தின் (ஐ.சி.சி.பி.ஆர்) கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் மதங்களை அவமதிக்கும் வகையில் முரண்பாடுகள் தோற்றம் பெறாத தன்மையை உறுதிபடுத்த சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version