சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் “சிசு சரிய” பேருந்து சேவை பாடசாலை விடுமுறையுடன் நிறுத்தப்படும். எவ்வாறாயினும், சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக பேருந்து சேவையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்கான சாதாரணதர பரீட்சை நாளை (29) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சாதாரணதர பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் இன்று (28) விசேட டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.
இதேவேளை, சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ள போதிலும், உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டை நிறைவுசெய்யும் என நம்புவதாக அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.