பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கரிசனை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக் இராவுத்தர் மரீக்கார் ஆகிய நால்வரும் இலங்கை பொலிஸாரினால் மே 18ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
நாங்கள் முன்னர் கரிசனை வெளியிட்டுள்ளபடி பயங்கரவாத தடைச்சட்டம் கண்மூடித்தனமான கைதுகளிற்கும் நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கும் துணைபோகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் காலத்திற்கு காலம் ஏதேனும் நியாயமான அல்லது உரிய செயல்முறை பாதுகாப்பின்றி சிறுபான்மையினத்தவர்களை இலக்கு வைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை சித்திரவதைகள் போன்றவற்றின் மூலம் பலவந்தமாக வாக்கு மூலம் பெறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவானிற்கு வழங்கிய தகவல்களின் படி அதிகாரிகள் மேலும் நால்வரிடம் வாக்கு மூலங்களை பெறவுள்ளனர் அவர்கள் தாங்களும் கைது செய்யப்படலாம் என அச்சம் கொண்டுள்ளனர் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவேளை இந்த விடயங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கான வரைவிலக்கணத்தை மேலும் விஸ்தரிக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் இவலுவான ஆதாரங்கள் இருந்தால் நியாயமான விசாரணை தரங்களை பயன்படுத்தி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குற்றத்திற்காக அவர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளிற்கு இணங்க முன்னெடுக்க வேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.