2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் நாளை (29) ஆரம்பமாகவுள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டு கொவிட் தொற்று ஏற்பட்டமையால் அந்த ஆண்டிலிருந்து தேசிய பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்த முடியாத நிலைமை காணப்படுகிறது. தற்போது ஒவ்வொரு ஆண்டுக்குமுரிய பரீட்சைகள் கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய இம்முறை நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இதற்காக 3,568 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பரீட்சை நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
5 நாட்களுக்கு தேவையான வினாத்தாள்கள் பரீட்சை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதேவேளை, விசேட தேவையுடைய மாணவர்கள், சிறைக் கைதிகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பரீட்சை பரீட்சார்த்திகள் இருப்பின் அவர்கள் மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில் அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சைகள் நாளை முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக சகல அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 12ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.