இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் கருத்துப்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆடை கொள்வனவு உத்தரவுகள் குறைந்துள்ளதாக தெரியவருகின்றது.
உலகளாவிய பணவீக்கம் காரணமாக இலங்கையில் பெறப்படும் ஆடை கொள்வனவு உத்தரவு 18% குறைந்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதனிடையே ஆடைத் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு இந்நிலை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதெனக் கூட்டு ஆடை சங்க மன்றத்தின் பேச்சாளர் யோகன் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது கிடைத்துள்ள ஆடை கொள்வனவு உத்தரவுகள் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே போதுமானது.எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் மீண்டும் கொள்வனவு உத்தரவுகள் கிடைக்கப்பெறும்.
இலங்கைக்கு மாத்திரமன்றி பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா, சீனா போன்ற நாடுகளிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியிலும், இலங்கை முதலீட்டுச் சபையானது 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 38% வளர்ச்சியை எட்டியுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரக்கோன் கூறியுள்ளார்.
இவ்வருடம் இதுவரையில் இலங்கை முதலீட்டுச் சபை 604 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 30 திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு 02 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொள்வனவு உத்தரவுகள் குறைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு தேவையான ஆதரவும் சலுகைகளும் வழங்கப்படும் என்று முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார். இதற்கிடையில் கடந்த சில மாதங்களில் ஒரு பெரிய ஆடை நிறுவனம் ஒன்றின் மூன்று தொழிற்சாலைகள், அதே போன்ற இரண்டு நிறுவனங்களின் தலா இரண்டு தொழிற்சாலைகள் மற்றும் மூன்று நிறுவனங்களின் தொழிற்சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
ஏறக்குறைய பத்து தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த சுமார் ஐயாயிரம் தொழிலாளர்களும், மறைமுக வேலைகளில் ஈடுபட்டுள்ள ஏராளமான மக்களும் வருமான ஆதாரங்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.