Home Srilanka Economy கொள்கை மறுசீரமைப்புக்கள் எனும் கடினமான செயன்முறை அவசியம்

கொள்கை மறுசீரமைப்புக்கள் எனும் கடினமான செயன்முறை அவசியம்

0

அனைத்துத்தரப்பினருக்கும் ஏற்புடைய சாதகமான பெரும்பாகப் பொருளாதார சூழ்நிலையைக் கட்டியெழுப்புவதில் ஏற்படக்கூடிய மிகமோசமான தாக்கங்களைத் தவிர்ப்பதற்கு ‘கூட்டிணைந்த கொள்கை மறுசீரமைப்புக்கள்’ என்ற கடினமான செயன்முறையை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாததாகும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி, வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் இலங்கை வர்த்தகப்பேரவை ஆகியவற்றுடன் கூட்டிணைந்து இலங்கையில் முதலீடுகளையும் முயற்சியாண்மையையும் ஊக்குவிக்கும் நோக்கில் சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் நேற்று முன்தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய கொள்கை மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மிகக்கடினமான குறுங்கால நடவடிக்கைகள் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். அதேவேளை இந்நடவடிக்கைகள் வணிகங்கள் மற்றும் குடும்பங்களின்மீது கடினமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதேவேளை ‘பணவீக்கத்தில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பானது வணிக முயற்சியாண்மைகளின் இலாப இயலுமையில் தேக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் புதிய முதலீட்டு வாய்ப்புக்களிலும் தடைகளைத் தோற்றுவித்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எந்தவொரு பொருளாதாரத்துக்கும் பணவீக்கமே முதலாவது எதிரி என்றும், தற்போது நாட்டின் பணவீக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், கையிருப்புப் பற்றாக்குறை நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மத்திய வங்கியின் முக்கிய குறிக்கோளாகக் காணப்பட்டது.

அதேபோன்று பெரும்பாகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலை நாட்டுவதற்கு விலை உறுதிப்பாட்டை மீண்டும் அடைந்து கொள்வதும், பணவீக்கத்தைக் குறைவான மட்டத்தில் பேணுவதும் இன்றியமையாதது என்பதை மத்திய வங்கி ஏற்றுக்கொண்டது’ என்று விளக்கமளித்துள்ள நந்தலால் வீரசிங்க, அதன்படி பணவீக்கம் 70 சதவீதத்துக்கு அப்பால் செல்வதைத் தடுப்பதற்கு மத்திய வங்கி பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதன்மூலம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் பணவீக்கம் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் ஒற்றை இலக்கப்பெறுமதியை அடையும் என்றும் எதிர்வுகூறியுள்ளார்.

அதேபோன்று இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவருவதாகவும், பணப்பரிமாற்றம் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வெகுவிரைவில் தளர்த்தப்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி இறக்குமதிகளுக்கான குறைந்தபட்ச வைப்புத்தொகை தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஏற்கனவே தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இவையனைத்தும் எதிர்வருங்காலங்களின் வணிக செயற்பாடுகளின் விரைவான மீட்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version