Friday, December 27, 2024
HomeSrilankaஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை

நீதிமன்றத்தின் தடை யுத்தரவை நீக்கி பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு சட்ட மா அதிபரின்  ஊடாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (26) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  எழுப்பிய விசேட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச தனது கேள்வியின் போது,நாட்டில் அரச பாடசாலைகளில் 35 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள்  நிலவுவதுடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிபர் வெற்றிடங்கள் நிலவி வருகின்றன.

கல்வி நிர்வாக சேவையில் 500க்கும் மேற்பட்ட பற்றாக்குறை இருந்து வருவதாக தெரியவருகிறது. கல்வித் துறையின் ஆராேக்கியத்தை பாதுகாத்துக்கொண்டு செல்ல இந்த வெற்றிடங்கள் விரைவாக நிரப்பப்பட வேண்டும். அதே போன்று 2500க்கும் மேற்பட்ட பதில் அதிபர்களின் பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளப்போகிறது என கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், 2020ஆம் ஆண்டில் வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக 2018, 2019, மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பட்டம் பெற்று வேலையற்று இருப்பவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டபோது, 53ஆயிரம் பேர்வரை விண்ணப்பித்திருந்தனர்.

அவர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக அரச நிறுவனங்கள், திணைக்களங்கள்,கல்வி காரியாலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பயிற்சி நடவடிக்கைக்காக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

அவர்களில் 22ஆயிரம் பேர்வரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர். அத்துடன் இவர்களுக்கு அரச ஊழியர்களாக பொதுநிர்வாக அமைச்சுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டில் இருந்தே சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இவர்களில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரி, அவர்களுக்கு எழுத்து மூல பரீட்சை நடத்தி, அவர்களில் தகுதியானவர்களை பயிலுநர் ஆசிரியர்களாக நியமித்து, பின்னர் 3 வருடங்களின் பின்னர் தேசிய கல்வி நிறுவனத்தில் வழங்கப்படுகின்ற ஆசிரியர் கல்வி தொடர்பான முதுகலை பட்ட சான்றிதழ் பெற்ற பின்னர் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் அடிப்படையில் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டோம்.

ஆசிரியர் பதவிக்காக பட்டதாரிகளை நியமிக்கும் போது 35 வயதுக்கு கீழ் பட்டவர்களே அதற்காக நியமிக்கப்படுவர். அவ்வாறு நியமிக்கப்படும் போது அவர்களுக்கு பரீட்சை ஒன்றை நடத்தி அதன் பின் நேர்முகப் பரீட்சையின் மூலமே அவர்கள் தெரிவு செய்யப்படுவர். பின்னர் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க 35 வயது 40 வயதாக மாற்றப்பட்டு விண்ணப்பம் கோரப்பட்டது.அதன் பிரகாரம் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைய 52ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன.

அவர்களுக்கு எழுத்து மூல பரீட்சை மார்ச் மாதம் 26ஆம் திகதி நடத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்திருந்தன. இந்நிலையில், பரீட்சைக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலர் இதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதற்கமைய  உயர்  நீதிமன்றம் பரீட்சை நடத்துவதை இடை நிறுத்தி உத்தரவிட்டது.

மார்ச் மாதம் பரீட்சை நடத்தி,  நாம் இந்த வருடத்திற்குள் அவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க தீர்மானித்திருந்தோம். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டன. இந்த விடயம் தொடர்பில் நாம் குறித்த பரீட்சையை நடத்துவதற்கு அனுமதி கோரி சட்டமா அதிபரின் ஊடாக உச்ச நீதிமன்றம் செல்ல தீர்மானித்துள்ளோம்.

அந்த வகையில் விரைவில் இந்த ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கு முதலில் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும்  எதிர்பார்த்துள்ளோம். அதேவேளை கல்வியியல் கல்லூரிகளிலிருந்து 7500 ஆசிரியர்களை ஜூலை 15ஆம் திகதி நியமிக்கவும் அத்தியாவசிய பாடங்களுக்காக மேலும் சில பட்டதாரிகளை விரைவில் இணைத்துக் கொள்ளவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments