நாட்டில் மருந்து தட்டுப்பாடு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது என தெரிவித்துள்ள இலங்கையின் மருத்துவ அமைப்புகள் அரசாங்கம் இந்த விடயத்தை அலட்சியம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளன.
அரசாங்கவைத்தியசாலைகளில் சில மருந்துகளிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என இலங்கை மருத்துவசங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரட்ண தெரிவித்துள்ளார். குறிப்பாக மருத்துவ நிலையங்களில் மருத்துவர்கள் நோயாளிகளை வெளியில் மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் மேலும் மருந்துகளின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளதால் நோயாளர்கள் சிலர் மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இது பெரும் பிரச்சினை இதற்கு தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்தஒன்றரை வருடங்களாக இந்த நிலை காணப்படுகின்றது ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தின் பாரதூரதன்மையை கருத்தில் கொள்ளவில்லை என வின்யா ஆரியரட்ண தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு உதவிவழங்கும் சமூகத்தினர் மருந்துகளை வழங்கும் நடவடிக்கையும் பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வலி நிவாரணிகள் நீரிழிவிற்கான மருந்துகள் புற்றுநோயாளிகளிற்கான மருந்துகள் உட்பட 120 மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அரச தனியார் மருத்துவமனைகளில் இந்த நிலை காணப்படுகின்றது, மேலும் சத்திரசிகிச்சை ஆய்வுகூடசாதனங்களிற்கும் தட்டுப்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.