தற்போதுள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்புக்கான சட்ட மூல வரைபை எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கொள்ள எதிர்பார்த்திருக்கிறோம். என்றாலும் சட்டமூல வரைபு மேற்கொள்ளப்பட்டாலும் மீண்டும் மக்களின் கருத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
தற்போதுள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கான கலந்தாய்வுக் குழு கூட்டத்தின் நான்காவது அமர்வு புதன்கிழமை (24) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
சமகால அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தொலை நோக்கு திட்டத்தில் எதிர்வரும் ஜூன், ஜூலை மாதங்களில் மின்சாரம் கட்டணம் முதலானவை குறையும் சாத்தியம் இருக்கிறது. இதேபோன்று பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் ஆகியோரின் நலன்களும் தொழில் சட்ட மூலம் உறுதி செய்யக்கூடியவகையில் தற்போதைய தொழில் சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் சட்டவரைவு மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதனை மீண்டும் இதுபோன்ற மக்களின் கருத்தாய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் போது மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களுக்கு முக்கியத்துவம் வழங்கிய பின்னரே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். இது தொடர்பில் எவராவது நீதிமன்றம் செல்லவிரும்பினால் அதற்கும் இடமளிக்கப்படும். இதன் பின்னர்தான் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம்.
மேலும் தற்போதைய பொருளாதாரத்திற்கு மத்தியில் வேலை வாய்ப்பின்றி இருப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கவா ? இந்த முயற்சி என்று சிலர் இதனை விமர்சிக்கின்றனர். அவ்வாறான உள்நோக்கம் எதுவும் இல்லை நாட்டை அபிவிருத்தி செய்வதுடன் பாட்டாளி மக்களின் நலன்களையும் சமூக பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி பரந்துபட்ட நோக்கத்துடன் சமகால அரசாங்கம் வெளிப்படையாகவே மேற்கொள்கிறது.
அத்துடன் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் சமூக பாதுகாப்பு முக்கியமானது. இதேபோன்று ஒரு ஊழியர் பணியாற்றும் நிறுவனத்திலும் அவருக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உறுதி செய்யும் தொழில் சட்ட நடைமுறை வேண்டும். வேலை கொள்வோர் மற்றும் ஊழியர்கள் தமது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான புதிய வழிமுறைகள் கையாள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.