உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தற்சமயம் ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (25) டோக்கியோவில் நடைபெறும் “ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28 ஆவது சர்வதேச மாநாட்டில்”(Nikkei) கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான சர்வதேச மாநாடு என்பது, ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் மற்றும் உலகில் ஆசியாவின் பங்கு பற்றி பிராந்தியத்தின் தலைவர்கள் ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு பாரிய சர்வதேச மாநாடு ஆகும்.
ஜப்பானின் “நிக்கெய்” (Nikkei) செய்தித்தாள் 1995 முதல் ஆண்டுதோறும் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த மாநாடானது இன்றும் நாளையும் டோக்கியோவில் நடைபெறும். இதன்போது ஜனாதிபதி ஜப்பானிய பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய அணுகுமுறையின் ஊடாக வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இதன்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெறவுள்ளது.