நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்திலும் , மத்திய பொருளாதார சந்தையிலும் மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் பிரகாரம், ஒரு கிலோ கோவா 250 – 280 ரூபாய்கும் ஒரு கிலோ கரட் 240 – 250 ரூபாய்க்கும் லீக்ஸ் 250 – 260 ரூபாய், உருளைக்கிழங்கு 270 ரூபாய், பீட்ரூட் 320 ரூபாய், தக்காளி 450 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகின்றன. புரோக்கோலி 1200 – 1300 ரூபாய்க்கும் ஒரு கிலோ கோலிபிளவர் 600 – 650 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் அத்தோடு நாட்டு மரக்கறிகளின் விலையும் அதிகரித்த வண்ணம் காணப்படுவதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சியிடம் வினவிய போது, மலையக மரக்கறி வகைகள் கட்டுப்பாடில்லாமல் நாடுமுழுவதும் விநியோகிக்கப்படுவதால் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தற்போது பெய்து வரும் மழை காலநிலை காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான ஆபத்து உள்ளதாலும், உள்ளூர் மரக்கறி உற்பத்தி செய்யப்படும் இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெருமளவு மரக்கறி தோட்டங்கள் பாதிப்படைந்துள்ளதாலுமே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்தாலும், மலையகத்தில் உருளைக்கிழங்கு விலை கடுமையாக குறைந்துள்ளது, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து இந்த நாட்டிற்கு உருளைக்கிழங்கு கொண்டு வரப்படுவதே காரணம் என தெரிவித்தார் .