இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்க்கப்படவில்லை, இரசாயன குண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை என்றால் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு தாராளமாக முகம் கொடுக்கலாம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் மார்புத்தட்டிக் கொள்கிறது.
கடந்த 14 ஆண்டுகளில் நிம்மதியாக வாழ்கின்றீர்களா. இன அழிப்புக்கு உள்ளான எமது உறவுகளின் ஆத்மா நிம்மதியாக இருக்க இடமளிக்காது.
சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ள கூடிய நீதியான தீர்வினை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற பந்தய,சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிங்கள பெரும்பான்மையின அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இன்றும் இந்த நாட்டில் நீதி கிடைக்கப் பெறவில்லை.
நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டுமாயின் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு ஊடாக தீர்வு வழங்க வேண்டும்.
நடைமுறையில் உள்ள இனப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்காவிட்டால் இந்த நாடு தொடர்ந்து அதளபாதாளத்துக்கு செல்லும் என்பதில் மாற்றமில்லை.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை.கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், குழுக்கள் நியமிக்கப்பட்டன. இருப்பினும் எந்த ஆணைக்குழுவாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கப் பெறவில்லை.
உள்ளக பொறிமுறை ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்று கொடுப்பதாக 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியது.
ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை ஆகவே இந்த நாட்டில் நீதி இல்லை.யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழர்கள் கட்டவிழ்க்கப்பட்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
யுத்தம் முடிவடைந்த 14 ஆண்டு காலங்கள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கனடாவின் பிரதமர் குறிப்பிட்ட கருத்தை இலங்கை அரசாங்கம் மறுதழித்துள்ளது.
ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது. உண்மையை கண்டறிவதாக இலங்கை சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியது அதனையே சர்வதேசம் இன்று கோருகிறது.
யுத்த குற்றம் இடம்பெறவில்லை, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு அச்சப்பட வேண்டிய தேவையில்லை.
கனடாவின் பிரதமர் வெளியிட்ட கருத்து தொடர்பில் இலங்கையில் உள்ள உயர்ஸ்தானிகரிகரிடம் வெளிவிவகாரத்துறை அமைச்சர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இன முரண்பாடு உள்ளது என்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். இராணுவத்தினரிடம் பிள்ளைகளை ஒப்படைத்தோம் எமது பிள்ளைகளை தாருங்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் கோருவது நியாயமானதே இதனை எவ்வாறு பிரிவினைவாதம் என்று குறிப்பிட முடியும்.
காணாமல் போனார் விவகாரத்திற்கு ஒரு சிறந்த தீர்வை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இதனையே ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் குறிப்பிடுகிறார்கள். இலங்கை ஆட்சியாளர்கள் சர்வதேசத்தை ஏமாற்றுகிறார்கள். இதன் காரணமாக சர்வதேசம் இலங்கையை தொடர்ந்து வலியுறுத்துகிறது. இலங்கை தொடர்பில் கனடாவின் பதிவுகளை மதிக்கிறோம்.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட கரிசனை கொள்ள வேண்டும். தமிழர்கள் மீது படுகொலை கட்டவிழ்க்கப்படவில்லை, இரசாயன தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் குறிப்பிடுகிறார்கள்.
அவ்வாறாயின் சர்வதேச விசாரணைக்கு தாராளமாக முகம் கொடுக்கலாம் தானே இறுதிக்கட்ட யுத்தத்தில் பசியால் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் மரணித்ததை ஒருபோதும் மறக்க முடியாது.
இந்த நாட்டில் பாரிய இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை சர்வதேச ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் அரசாங்கம் மாத்திரம் தான் 2009 ஆம் ஆண்டு முதல் இருந்த இடத்தில் இருந்து நகராமல் இருக்கிறது.
இறுதிக்கட்ட யுத்தத்தில் இரசாயன குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பதை பலர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்கள், பலர் சாட்சியமளித்துள்ளார்கள்.
இரசாயன குண்டு தாக்குதல் பிரயோகிக்கப்படவில்லை என்றால் அரசாங்கம் சர்வதேச பொறிமுறை விசாரணைக்கு கதவு திறக்கலாம். மறைக்கப்பட்ட உண்மை வெளிக்கொண்டு வர வேண்டும்.
உள்ளக பொறிமுறையில் தீர்வு கிடைக்காது என்பதற்காகவே தொடர்ந்து போராடுகிறோம். யுத்தத்தால் அழிந்தவர்கள் நாங்கள் எம்மை அழித்தவர்கள் நீதிபதிகளாக இருந்து செயற்படும் போது எவ்வாறு நீதி கிடைக்கும்.
அழிக்கப்பட்ட எம் உறவுகளை நிம்மதியாக வாழ இடமளிக்காத வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த ஆக்கிரமிப்புக்கள் தீவிரமடைந்துள்ளன.
எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் என்பதையே தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.பாதிக்கப்பட்ட எமக்கு அரசியலமைப்பு ஊடாக தீர்வு தாருங்கள் என்பதையே கோருகிறோம்.
தமிழர்கள் மீது இன அழிப்பு கட்டவிழ்க்கப்பட்டது என்று மன்னிப்பு கோரும் நாளில் தான் இந்த நாட்டில் நீதி நிலைக்கும்.யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என மார்பு தட்டுகின்றீர்கள்.
கடந்த 14 ஆண்டுகாலங்களில் நாடு நிம்மதியாக உள்ளதா, பொருளாதாரம் சிறந்த முறையில் உள்ளதா, ஆட்சியாளர்கள் நிம்மதியாக உள்ளார்களா, படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் ஆத்மா நிம்மதியாக வாழ விடாமல் தடுக்கிறது. ஆகவே நீதியான முறையில் செயற்பட்டு தீர்வை தாருங்கள் என்றார்.