புகையிரத திணைக்களம் கடந்த ஆண்டு மாத்திரம் 10 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. ஊழலற்ற வகையில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டுமாயின் புகையிரத திணைக்களம் அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும்.
எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் புகையிரத சேவைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அசோக அபேசிங்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் புகையிரத பாதைகளின் மொத்த நீளம் 1620.8.57 கிலோமீற்றராக காணப்படுகிறது. மருதானை தொடக்கம் பெலியத்த வரை 246.5 கிலோமீற்றர் பாதையும், மருதானை முதல் பதுளை வரை 356 கிலோமீற்றர் பாதையும், களனி வழியில் 59.27 கிலோமீற்றர் பாதையும், மருதானை முதல் புத்தளம் வரை 142.86 கிலோமீற்றர் பாதையும் இவ்வாறு காணப்படுகிறது.
கரையோர புகையிரத பாதையில் 04 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளும்,பிரதான பாதையில் 101 பாதுகாப்பற்ற கடவைகளும்,களனி வழி பாதையில் 30 பாதுகாப்பற்ற கடவைகளும், புத்தளம் பாதையில் 34 பாதுகாப்பற்ற கடவைகளும் காணப்படுகின்றன. பாதுகாப்பற்ற கடவைகளுக்கு பதிலாக தற்காலிக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கு பதிலாக பாதுகாப்பான கடவைகளை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகையிரத வீதி புனரமைப்புக்களுடன் கடவை திருத்தப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.
புகையிரத திணைக்களம் இலாபம் பெறும் நிறுவனமல்ல கடந்த ஆண்டு மாத்திரம் 10 பில்லியன் ரூபா நட்டத்தை திணைக்களம் எதிர்கொண்டுள்ளது.
புகையிரத திணைக்கள சேவைகளில் நிலவும் மோசடிகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமாயின் பொது மக்களுக்கான சேவைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும். இதற்கமைய எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் புகையிரத சேவைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும்.
புகையிரத திணைக்கள கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமாயின் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இதற்கமைய 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டு புகையிரத சேவை தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களத்தை ஒரு அதிகார சபையாக மாற்றியமைத்தால் பாரிய முன்னேற்றத்தை அடைய முடியும். இதற்காக புகையிரத சேவை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஆகவே முறையான மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்து கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக பாடசாலை மாணவர்களின் பருவகால போக்குவரத்து அட்டையின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பருவகால போக்குவரத்து அட்டைக்கு குறைந்த கட்டணம் அறவிடப்படுகிறது.
குறைந்த பேருந்துகளை கொண்டு பாடசாலை போக்குவரத்து சேவையை முன்னெடுக்க வேண்டுமா? அல்லது கட்டணத்தை அதிகரித்து சேவையை விரிவுப்படுத்த வேண்டுமா? என்ற இரண்டில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதி கொடுப்பனவு, விசேட சிறப்புரிமைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களின் பருவகால போக்குவரத்து அட்டையின் கட்டணத்தை அதிகரிப்பது முறையற்றது என்றார்.
இதன்போது குறுக்கிட்டு உரையாற்றிய சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி ஏதும் அதிகரிக்கப்படவில்லை. காப்புறுதி தொடர்பில் பத்திரிகைகளில் வெளியான செய்தி பொய்யானது என்றார்.