மியன்மாரில் உள்ள இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சிட்வே துறைமுகம் கடந்த வாரம் இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திறந்துவைக்கப்பட்டது.
இது, இந்தியா, மியன்மார் மற்றும் பரந்த பிராந்தியத்துக்கு இடையே வர்த்தக இணைப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகளை ஊக்குவிக்கவும் அரசாங்கத்தின் கிழக்கு கொள்கையின் கீழ் வட கிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என்று அமைச்சர் சோனோவால் தெரிவித்திருந்தார்.
தென்கிழக்கு ஆசியாவுக்கான இந்தியாவின் நுழைவாயிலாக சிட்வே துறைமுகம் செயற்படும். அதேபோன்று வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன் என அவர் கூறினார்.
இந்த துறைமுகம் 484 மில்லியன் டொலர் திட்டமாகும். இது இந்தியாவின் மானிய உதவியின் கீழ் கட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு இந்தியாவுடன் சிறந்த இணைப்புக்கான மாற்று வழியை உருவாக்குவதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
இந்த துறைமுகம் மியன்மாரில் உள்ள பலேத்வாவை உள்நாட்டு நீர்வழியூடாகவும், பலேத்வாவிலிருந்து மிசோரமில் உள்ள சோரின்புய் வரையான சாலை வழியாகவும் இணைகிறது. வடகிழக்கு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இடையே உள்ள வர்த்தகத்துக்கு இது மிகவும் சாத்தியமான பாதையாகும்.
2009ஆம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தம், கடந்த சில ஆண்டுகளாக பல எல்லை மோதல்கள் மற்றும் சீனாவின் விரிவாக்கம் காரணமாக இந்திய – சீன உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பல ஆண்டுகளாக மூலோபாய பொருத்தத்தை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தமான் மற்றும் நிக்கோபா தீவுகளில் உள்ள இந்தியாவின் சொந்த இராணுவத் தளத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள தொலைதூர கோகோ தீவுகளில் சீன உளவுத் தளம் அமைப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.