தென்னிந்திய திரையுலகில் முக்கியப் பாத்திரங்களுக்குப் பெயர் பெற்றவர்களில் ஒருவரான பழம்பெரும் நடிகர் சரத்பாபு காலமானார். ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை (22) அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்கும் போது அவருக்கு வயது 71 ஆகும். கடந்த மாதம் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக ஐதராபாத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாகத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் அவர். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.