நெதர்லாந்து நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் இலங்கைக்கு வந்து, இலங்கை நிறுவனங்கள் மற்றும் இலங்கையில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் ஆர்வமாக இருக்கின்றனர்.
இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹோபேக் கூறியுள்ளார்.
கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கக்கூடிய வகையில், ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம் நேற்று சனிக்கிழமை (20) அசுபினி எல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நெதர்லாந்து தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த திட்டம் இலங்கை, நெதர்லாந்து மற்றும் துருக்கிய ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பொறியியலாளர்களின் பெறுமதியான அறிவினால் அதிகளவான மக்கள் தொடர்ச்சியாக சுத்தமான குடிநீர் வசதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இந்த அற்புதமான திட்டத்தை உருவாக்க முடிந்தது.
இது 81 மில்லியன் யூரோ செலவாகும் திட்டமாகும். இந்தத் திட்டமானது திட்டமிடல், ஒன்றிணைந்து செயற்படல் மட்டுமன்றி, அறிவை பகிர்ந்துகொண்டமையும் சேர்ந்தே மக்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியுள்ளது. எனவே, இன்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
வடிவமைப்பு என்பது சம வாய்ப்புகளை அணுக அனுமதிப்பது என்று நான் நினைக்கிறேன். தற்போது, புதிய சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கையில் புதிய வர்த்தகங்கள் மற்றும் முதலீடுகளுக்கு தேவையான பின்னணியை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார்.
நெதர்லாந்து நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் இலங்கைக்கு வந்து, இலங்கை நிறுவனங்கள் மற்றும் இலங்கையில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் ஆர்வமாக இருக்கின்றனர். இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது இலங்கை மக்களுக்கு உயர் நன்மைகளை பெற்றுத்தரும். அவர்களுக்கு மேலும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இந்த குடிநீர் திட்டத்துக்காக இலங்கை அரசு 3,847 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்ததோடு, நெதர்லாந்து அரசும் 81.95 மில்லியன் யூரோ நிதி உதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.