சட்ட விரோதமாக மரப் பலகைகளை கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் தடுப்புப் பிரிவினரால் இன்று (21) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோதமாக மரப் பலகைகளை டிப்பர் வாகனத்தில் கடத்திச் செல்வதாக புத்தளம் பிராந்திய பொலிஸ் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் புத்தளத்தின் கல்குளம் பகுதியில் வைத்து டிப்பர் வாகனமொன்றை இன்று முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது, அந்த வாகனத்திலிருந்து தேக்கு மற்றும் பாலை மரப் பலகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மரப் பலகைகளை கடத்திச் சென்றுகொண்டிருந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பிராந்திய பொலிஸ் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இதனையடுத்து, சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட மரப் பலகைகளை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.