மலையக மக்களை ஒரு தனித் தேசிய இனமாக பிரகடனப்படுத்தி தேசிய நீரோட்டத்தில் உள் வாங்கி, ஏனைய சமூகங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சகல உரிமைகளும் மலையக மக்களுக்கும் கிடைப்பதற்காக உறுதி செய்யப்பட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளரான பீ. கௌதமன் தெரிவித்தார்.
” மலையகம் 200 ” என்ற தொனிப்பொருளில் நுவரெலியாவில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற நடைபெற்ற நிகழ்வின் இறுதி நாளாகிய ஞாயிற்றுக்கிழமை (21) நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு தீர்மானங்கள் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், மலையக பெருந்தோட்ட மக்கள் குடியிருக்கும் காணியும் குடியிருப்புகளும் கிராமங்களாக மாற்றப்பட்டு அவர்களுக்கு சொந்தமாக்கப்பட வேண்டும்.
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 40 வருட காலம் பிரஜாவுரிமை பரிக்கப்பட்டு நாடரற்றவர்களாக இந்த நாட்டில் வாழ்ந்துள்ளோம். ஏனைய சமூகங்களை பார்க்கும் பொழுது எமது மலையக சமூகம் பின்தங்கி சமூகமாக வாழ்ந்து வருகின்றது. அவற்றை நிவர்த்தி செய்வதற்காக தீவீர திட்டம் ஒன்றை அரசாங்கம் வடிவமைத்து அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனை அரசாங்கம் வடிவமைக்கும் பொழுது இவ்வவளவு காலம் அரசாங்கத்தால் புறக்கணிக்கப் பட்டிருந்த இந்த சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் விசேடமாக மலையக மக்களுக்கான காணி உரிமை குடியிருப்புகளும் உறுதி செய்யப்படவேண்டும்.
தோட்டப்பகுதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் வைத்திய நிலையங்களும் அரசாங்கம் பொறுப்பேற்று சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து தேவையான வைத்திய சேவைகளை செய்து கொடுக்க வேண்டும்.
பெருந்தோட்ட பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு தகுதி வாய்ந்த கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழிற்நுற்ப ஆசிரியர்களை நியமித்து தேசிய பாடசாலைகளாக மாற்ற வேண்டும்.
தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்கி தமிழ் மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன், நுவரெலியாவில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும்.
10 ஆண்டு அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து எங்களது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ப சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். இலங்கையில் இருக்கும் தொழில் பாதுகாப்பு சட்டம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
எங்களது பெண்கள் களத்திலும் வீட்டு பணி பெண்களாக தொழில் புரியும் பொழுது எந்தவிதமான பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தபடாமல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதேபோல தொழில் நிமிர்தம் பல்வேறு இடங்களில் தொழியும் எமது மக்களுக்கு ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் எமது தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
மலையக மக்கள் இலங்கையில் குடியேறி 200 வருடங்கள் கடந்தும் இன்னும் போராட்டங்களை நடத்தியே வாழுகின்றார்கள். ஆகையால் இந்த மலையக சமூகத்தையும் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்பட்டு அவர்களின் தேவைகளையும் நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.