அவுஸ்திரேலியாவின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் இனவெறி தாக்குதல்களை எதிர்கொண்டதால் குறிப்பிட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டன் கிரான்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது தொழில்வாழ்க்கையில் எப்போதும் இனவெறியை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ள அவர் எனினும் மன்னர் சார்ல்ஸின் முடிசூடும் நிகழ்வை தொகுத்து வழங்கிய பின்னர் தனக்கு எதிராக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பூர்வீக இனத்தை சேர்ந்தவரான ஸ்டன் கிரான்ட் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வை தொகுத்து வழங்கியவேளை காலனித்துவம் தனது மக்களை பாதித்த விதம் குறித்து குறிப்பிட்டிருந்தார். முடிசூட்டும் நிகழ்வின் போது கிரீடம் படையெடுப்பு நிலத்திருட்டு அழித்தொழிக்கும் போரை குறிக்கின்றது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தனது வார்த்தைகளை சிலர் திரிபுபடுத்தினர், என்னை வெறுப்பு மிகுந்தவனாக சித்தரித்ததுடன் எனக்கு எதிராக இனவெறிதுஸ்பிரயோகங்களை முன்னெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார். ஏபிசி தனது தொகுப்பாளருக்கு எதிரான கொடுரமான துஸ்பிரயோகத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தது. எனினும் தனது நிறுவனம் தன்னை பாதுகாக்க தவறிவிட்டது என கிரான்ட் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டன் கிரான்ட் கடந்த நான்கு தசாப்தங்களாக ஊடகத்துறை தொடர்பில் பல விருதுகளை பெற்றதுடன் வர்த்தக தொலைக்காட்சியின் முதலாவது அபோரிஜினியல் தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்றார். எனினும் வெள்ளிக்கிழமை அவர் ஏபிசியின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.