யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகவும், ஒருவர் இணைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பேராசிரியர் ஒருவர் துறைக்குரிய இருக்கைப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக இரண்டு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகவும், விவசாய பீடத்தைச் சேர்ந்த ஒருவரை இணைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியதுடன், முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரைத் துறைக்கான இருக்கைப் பேராசிரியராக நியமிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (20), சனிக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அவற்றின் படி, முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தின் மனித வள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி (திருமதி) எஸ். எம். சி. மகேந்திரன் அலோசியஸ் மனித வள முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும், விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பூ. ஐங்கரன் இரசாயனவியலில் பேராசிரியராகவும், விவசாய பீடத்தின் விவசாயப் பொருளியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. சூரியகுமார் விவசாயப் பொருளியலில் இணைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இதேநேரம், முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தில் மனித வள முகாமைத்துவத் துறையில் பேராசிரியரும் (Professor in Human Resource Management) , மனித வள முகாமைத்துவத் துறைத் தலைவருமான பேராசிரியர் என் கெங்காதரன் மனித வள முகாமைத்துவத் துறைப் பேராசிரியராகப் (Professor of Human Resource Management) (துறைக்கான இருக்கைப் பேராசிரியர் – Cadre Chair professor ) பதவி உயர்த்தப்படுவதற்கான தெரிவுக் குழுவின் பரிந்துரையைப் பரிசீலனை செய்த பேரவை அதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது.