இலங்கை கடந்த 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற போதிலும் அந்த சுதந்திரம் மூலம் கிடைக்கப்பெற்ற உரிமைகளை நாம் அனுபவிக்க முடியாமல் இன்றும் இந்த நாட்டில் இருக்கின்றோம்.
இந்த நாடு சுதந்திரம் பெற முன்னரும் சுதந்திரம் கிடைத்த பின்பும் எமது மக்கள் அடிமைகளாகவே வாழுகின்றார்கள் என்பதுதான் உண்மை என மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் நுவரெலியா புதியநகர மண்டபத்தில் நடைபெற்ற ” மலையகம் 200 ” நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொழுது கூறினார்.
அங்கு இராதாகிருஷ்ணன் தொடர்ந்து உரையாற்றுகையில், தென்னிந்தியாவிலிருந்து இலங்கை நாட்டுக்கு நாட்கூலிகளாகவும் அடிமைகளாகவும் அழைத்துவரப்பட்ட எமது மூதாதையர்ககள் கடந்த 200 வருடங்களாக அவர்கள் அனுபவித்த துன்பதுயரங்களின் வரலாற்றின் கண்ணோட்டத்தை தெழிவுபடுத்தும் நிகழ்வை முத்துலிங்கம் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். அவரை நான் பாராட்டுகின்றேன்.
எமது சமூகத்திற்கு இந்த நாட்டில் என்ன நடந்தது என்று கடந்த 60, 70 வருடங்கள்தான் எங்களுக்கு தெரியும். அந்த கையில் கடந்த 1948 ஆண்டு இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தாலும் இந்த சுதந்திரத்தை மலையக மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத சுதந்திரமாக இருக்கின்றது.
ஏன்னென்றால் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரத்திற்கு பின்பும் எமது சமூதாயம் அடிமைகளாகதான் இருக்கின்றோம். என்றுதான் கூறவேண்டும்.1948 ஆம் ஆண்டிற்கு பின் இந்த நாடில்வாழும் ஏனையோருக்கு பிரஜாவுரிமை வாக்குரிமை உரிமை, சுய மரியாதை இருந்தது. ஆனால் மலையக மக்களுக்கு பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.
நாடற்றவர்களாக நாங்களும் வாழ்ந்திருகின்றோம். அதற்கு பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் படிப்படியாக மாற்றமடைந்து எமது மக்களுக்கு பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டது.
நேரு -கொத்தலாவ ஒரு ஒப்பந்தம் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அதில் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம் மிகவும் மோசமான ஒப்பந்தம் 6 பேர் இந்தியா சென்றால் 4பேர் இங்கு இருக்கலாம். என்ற ஒப்பந்தத்தால் 10 இலட்ச மக்ககளில் 6 இலட்சம் மக்கள் இந்தியாவிற்கு சென்று விட்டார்கள்.
மிகுதியாக இருந்த 4 இலட்சம் மக்களுக்கு அரசாங்கத்தின் தேவைக்காக படிப்படியாக பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டது. சான்றிதழ்கள் மூலமும் சான்றிதழ்கள் இல்லாமல் சத்தியக்கடதாசி மூலமும் வாக்களிக்க தகுதி பெற்றார்கள். இவர்களின் வாக்குகள் மூலமே பல கட்சிகள் ஆட்சி அமைத்து வந்துள்ளன. ஆனாலும் ஒரு சில தனி வீடுகள் கட்டடப்பட்ட போதிலும் இன்னும் தொழிலாளர்கள் லைன் அறைகளிலேயே அதிமானவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.கல்வி அறிவு இல்லாமல் இருந்தது.
தற்பொழுது கல்வி அறிவுள்ள சமூகமாக மாற்றமடைந்து வருகின்றது. சுகாதார துறையிலும் சற்று மாறி வருகின்றது. அதே போல சமூகமும் சற்று மாறிவருகின்றது. அண்மைக்காலங்களாக தமிழ் முற்போக்கு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
எதிர் காலத்திலும் இந்த மக்களின் அபிவிருத்திக்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டியிருப்பதால் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என அவர் கூறினார்.