Friday, December 27, 2024
HomeIndiaதேனி மாவட்டத்தில் கொத்தடிமைகளாக வெளிமாநிலங்களுக்கு விற்கப்படும் குழந்தைகள்

தேனி மாவட்டத்தில் கொத்தடிமைகளாக வெளிமாநிலங்களுக்கு விற்கப்படும் குழந்தைகள்

தேனி மாவட்டத்தின் பெரும்பகுதி விவசாயம் சார்ந்த தொழிலாகவே உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களை குறிவைத்து குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

சிறுவயதில் பள்ளிக்கு செல்லாத 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைக்கு ரூ.10ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலைபேசி வெளிமாநிலத்திற்கு வேலைக்கு அழைத்துச்செல்கின்றனர். வறுமையில் உள்ள பெற்றோருக்கு அந்த தொகை மிகப்பெரிய பணமாக தெரிவதால் பலர் தங்கள் குழந்தையை விற்றுவிடுகின்றனர். இதுபோல விற்பனை செய்யப்படும் குழந்தைகள் அவர்களின் கொடுமை தாங்காமல் அங்கிருந்து தப்பிவிடுகின்றனர்.

மொழி தெரியாத மாநிலத்திற்கு செல்லும் குழந்தைகள் அங்கிருந்து தப்பி குற்றசெயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் அவலமும் நடந்து வருகிறது. ஆண்டிபட்டி அருகில் உள்ள வேலப்பர் கோவில் பகுதியை சேர்ந்த ரவி மகன் தமிழரசன்(14), வேல்முருகன் மகன் ஞானவேல், பட்டவராயன்(17) ஆகிய 3 பேரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஒருவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்கு அழைத்துச்சென்றார். சில மாதங்கள் அவர்கள் தங்கள் பெற்றோருடன் பேசி வந்த நிலையில் அதன்பிறகு எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளனர்.

அவர்களது செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து வேலைக்கு அழைத்துச்சென்ற உசிலம்பட்டியை சேர்ந்த ஏஜென்டிடம் கேட்டபோது அவர்கள் 3 பேரும் ஓட்டலில் திருடிவிட்டனர். அதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பே அவர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டோம் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார். 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதே குற்றம் என்று தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி வரும் நிலையில் சிறுவர்களை கொத்தடிமையாக வேலைக்கு அழைத்துச்சென்று தற்போது அவர்கள் எங்கே உள்ளனர் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர்கள் ராஜதானி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர்ரகுமான் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டு கரட்டு காலனியை சேர்ந்த 2 சிறுவர்கள் வெளிமாநிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களது நிலையும் தற்போது என்ன ஆனது என தெரியாமல் அவர்களது பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இதுபோன்ற குழந்தை விற்பனை நடைபெற்று வருகிறது. ஒருபுறம் மைனர் பெண்குழந்தைகளுக்கு திருமணம் நடத்திவரும் ஏழை பெற்றோர் வறுமை காரணமாக தங்கள் ஆண்குழந்தைகளை விற்பனைக்காக வெளிமாநிலத்திற்கு விற்று வருகின்றனர்.

இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை விலை கொடுத்து வாங்கிச்செல்லும் ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments