முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அரசியல்வாதிகள் அரசியல் மேடையாக்க வேண்டாம் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சகாதேவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் என்பது அரசியல் செய்யும் இடமாக மாறி உள்ளது.
2009 ஆம் ஆண்டு கால பகுதியில் இவர்கள் எங்கிருந்தார்கள் என்றால் உண்மையிலேயே மிகவும் ஒரு ஆச்சரியமான விடயம்.
இவர்கள் இவ்வளவு பேரும் இருந்தார்களா என்று கூட கேட்க தோன்றும் உண்மையில் அவர்கள் அனைவரும் தலைமறைவாக இருந்தார்கள்.
2009 ஆம் ஆண்டு இந்த முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்ற போது இப்போது இருக்கின்ற தலைவர்கள் எவரும் இந்த யுத்தத்தை நிறுத்த முயற்சி செய்யவில்லை. ஆனால் இப்பொழுது இந்த வாகன ஊர்திகளை கொண்டு திரிகிறார்கள்.
மக்கள் தங்கள் வீடுகளில் இதனை அனுஸ்டிக்க வேண்டும். இந்த முள்ளிவாய்க்காலில் சிரட்டை வியாபார பொருளாகி இருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல, தமிழர் வாழும் நாடுகள் ஒவ்வொன்றிலும், உணர்வுள்ள தமிழர் கூடும் இடங்கள், வீடுகள் ஒவ்வொன்றிலும் நிகழவேண்டிய நிகழ்வாகும். இது சாதி, சமய, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வாக அனுஷ்டிக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நிறைய பாடங்களை நமக்கு கற்றுத் தந்துள்ளது.
சிங்கள மக்கள் பாற்சோறு கொண்டாடுவதை விடுத்து இந்த துயர நிகழ்வில் தாங்களும் கலந்து கொள்ள வேண்டும். புத்தரின் போதனையில் மிக முக்கிய அத்தியாயமாக உள்ள கர்மா பற்றி ஒவ்வொரு பௌத்த மதத்தவரும் சிந்திக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் மே 17 அன்று உணர்வுள்ள தமிழன் ஒவ்வொருவரும் உணவை தவிர்ப்போம். மே 18 அன்று உணர்வுள்ள தமிழர் வீடுகள் ஒவ்வொன்றிலும் அறுசுவை உணவை தவிர்ப்போம்.
அன்றைய தினம் மதியத்திற்குப் பிறகு ஒருவேளைக் கஞ்சியோடு அந்த நாளை நிறைவு செய்வோம்.
அன்று மாலை விளக்கேற்றி உணர்வோடு ஒன்றி நிற்போம். சகல உணவகங்களிலும் உணர்வோடு ஒரு சாதாரண கஞ்சியை இலவசமாக வழங்குவோம்.முள்ளிவாய்க்காலில் அரசியல்வாதிகளின் ஒன்று கூடலை முற்றாக நிராகரிப்போம். முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடும் எந்த ஒரு அரசியல்வாதியும், முள்ளிவாய்க்காலில் மக்களின் உணர்வுக்கு தலைமை தாங்கும் எந்த ஒரு அரசியல் தலைவரும், தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக மக்களுக்கு சத்தியம் செய்து தர வேண்டும்.
அவர்கள் மட்டுமே அந்த மண்ணில் தலைமை தாங்க பொருத்தமானவர்கள். முள்ளிவாய்க்கால் எமக்கு கற்றுத் தந்த பாடங்கள் என்ன? நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன? அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்.
இன மோதலுக்கும். சாதி, சமய, மத வேறுபாட்டிற்கும், வர்க்க, பிரதேச வேறுபாட்டிற்கும் முடிவு கட்டுவோம். உணர்வுகளை அரசியலாக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என தெரிவித்துள்ளார்.