வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர ஆளுநர் பதவிகளுக்கு முன்னாள் அமைச்சர்களான தயா கமகே மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
முன்னதாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் கடந்த 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தது.
வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கர்ணகொட ஆகியோர் இதற்கு முன்னர் பதவிகளை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.