தமிழ்வளர்ச்சி இயக்குநர் ந.அருள்நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப்போட்டிக்கு 2022-ம் ஆண்டில் (01.01.2022 முதல் 31.12.2022 வரை) தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியருக்கு ரூ.30ஆயிரமும், அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்படும்.
போட்டிக்குரிய விண்ணப்பம் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித்துறையின் இணையதளத்தில் (https:tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்துடன் 10 நூற்படிகள், போட்டி கட்டணம் ரூ.100-ஐ (“தமிழ்வளர்ச்சி இயக்குநர், சென்னை“ என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை) “தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008” என்ற முகவரிக்கு ஜுன் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044 – 28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.