Home Srilanka Politics வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை விரைவாக கையளிக்க நடவடிக்கை

வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை விரைவாக கையளிக்க நடவடிக்கை

0

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காரணங்களால் விடுவிக்காமல் உள்ள காணிகளை உரியவர்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரச திணைக்களத்தின்  தென் மற்றும் மத்திய ஆசிய பணியகத்தின் பிரதி உதவி செயலாளர் அப்ரீன் அக்டரிற்கும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ்வுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை நீதியமைச்சில்  இடம்பெற்றது. இதன்போது  பிரதி உதவி செயலாளர் அமைச்சரிடம் வினவிய கேள்விகளுக்கு தெளிவுடுத்துகையிலேயே இவ்வாறு தெரிவித்ததாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில்  பிரதி உதவி செயலாளர் அமைச்சரிடம் ஆலோசித்திருந்தார். அதற்கு அமைச்சர், இந்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்கள், அத்துடன் அவற்றை உள்வாங்குவதற்கான தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தாக்கம் செலுத்திய காரணிகள் ஆகியவற்றை இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.

அத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பிலும், இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் ஏற்படும் மோசடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தை அனுமதிக்கும் போதும்  எதிர்க்கட்சியால்  தடைகள் வந்தபோதும் , அதனை அனுமதிக்கப்பட்ட பின்னர் நாட்டுக்கு தேவையான சட்ட மூலங்களை அனுமதிக்கும்போது அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கிறோம்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட சிவில் தரப்பின் பிரதிநிதிகள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வேண்டாம் என்றால் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதா என்ற கருத்தாடல் நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கிறது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பிரேரணைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் முடியுமானவகையில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதற்போது பிரேரணைகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.

மேலும் யுத்தம் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்பு படைகள் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் பிரதி உதவி செயலாளர் அமைச்சரிடம் வினவியபோது, இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காரணங்களால் விடுவிக்காமல் உள்ள காணிகளை உரியவர்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. காணி பிரச்சினை என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல, காணி தொடர்பில் சரியான மதிப்பீட்டை மேற்கொள்ள 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் வனப்பகுதி எத்தனை சதவீதமாக காணப்பட்டது என்பதை  ஆராய்வதற்கு காணி அமைச்சு மற்றும் நில அளவை திணைக்களம் ஒன்றிணைந்து காணி அளவை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதனூடாக நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் நீதி கட்டமைப்பின் அபிவிருத்திக்காக ஐக்கிய அமெரிக்க இராச்சியம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனம் வழங்கும் ஒத்துழைப்பை வரவேற்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version