யாழ்.சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் முள்ளிவாய்க்கால் ஊர்தி பவனிக்கு இலங்கை இராணுவத்தால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நினைவேந்தலின் நான்காம் நாள் பயணம் நேற்று(15) இரணைமடுவில் ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இராணுவ அதிகாரி ஊர்தி தொடர்பில் கேள்வி எழுப்பிய நிலையில் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம்.
இதன் ஒரு அங்கமாக தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ம் திகதி தொடங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து தொடங்கிய இந்த ஊர்திப் பவனியானது வவுனியா சென்று மன்னார் சென்று அங்கிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம் கிளிநொச்சி பூநகரி சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது.
இதனை தொடந்து ஊர்தி பவனி யாப்பாணத்தை வந்தடைந்துள்ளது. இதேவேளை இன்று (16) யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.