துருக்கியில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் துருக்கி அதிபர் தய்யீப் எரடோகனுக்கும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் கெமல் கிளிக்டரோக்லுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு துருக்கியில் நேற்று (மே 15) அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். அதன் பிறகு தற்போது வரை துருக்கியின் அதிபராக அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கி – சிரிய எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர பூகம்பங்களால் 50,000க்கும் அதிகமானோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.
இந்த பூகம்பத்தின்போது மீட்புப் பணிகளை சரிவர முடுக்கிவிடவில்லை என்று அதிபர் எர்டோகன் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இன்னொருபுறம் கடந்த 10 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு இருக்கும் துருக்கியின் மோசமான பொருளாதாரமும் தேக்கநிலையும் பொதுமக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
துருக்கியின் பணவீக்கம் தற்போது 85% அதிகரித்துள்ளது. துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் ஒன்று திரண்டு துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும், குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமல் கிளிக்டரோக்லுவை எதிர்க்கட்சி பொது வேட்பாளராக தேர்ந்தெடுத்தனர்.
இந்தச் சூழலில் பெரும் பதற்றத்துக்கிடையே நேற்று (மே 15) துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கெமலுக்கு சாதகமாகவே வந்துள்ளன. மேலும் துருக்கியில் 50 லட்சம் புதிய வாக்காளர்கள் இருப்பதால் அவர்கள் அனைவரும் கெமலுக்கே வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் வேட்பாளர்கள் இருவரில் ஒருவர் 50% வாக்குகள் பெறவில்லையெனில், மே 28 அன்று துருக்கியில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும்.