நாட்டில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை முறையாக செயற்படுத்த எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்படுத்தவில்லை. இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ஆகவே ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்த போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாகாண ஆளுநர்கள் செயற்படுகிறார்கள். ஆளுநர் நியமனம், பதவி நீக்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஆளுநர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த போவதாக குறிப்பிடப்படுகிறது. யாரை ஆளுநராக நியமிக்க வேண்டும், யாரை பதவி நீக்கம் வேண்டும் என நாங்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கவில்லை.
நாட்டில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்படுத்தவில்லை. இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.
ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை மாத்திரம் ஜனாதிபதியிடம் முன்வைத்தோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.
பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் புதிய நிலையான அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.
நிலையான அமைச்சரவை நியமனம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
அமைச்சு பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தவில்லை. ஜனாதிபதியின் அதிகாரத்தை சவாலுக்குட்படுத்த போவதில்லை என்றார்.