வவுனியாவில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் மற்றும் தமிழினப் படுகொலையை நினைவூட்டும் ஊர்தி பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முல்லைத்தீவில் இருந்து நேற்று முன்தினம் (12) இந்த ஊர்தி பவனி ஆரம்பமானதை தொடர்ந்து இரவு வவுனியாவை ஊர்தி வந்தடைந்து, நேற்று (13) காலை மீண்டும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படத் தொடங்கியது. அவ்வேளை, இந்த ஊர்திக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர், குறித்த ஊர்திப் பவனி வவுனியா நகரை வலம் வந்ததுடன், மன்னார் நோக்கி பயணத்தை தொடர்ந்து, இன்று மாலை 4 மணியளவில் மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதி மற்றும் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டது.
இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து ஊர்தியை நோக்கி அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து இந்த நினைவு ஊர்தியானது பேசாலை நோக்கி புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வோர் ஆண்டும் மே 12 முதல் மே 18ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழமையாகும்.
அதன்படி, இந்த ஆண்டு பல பகுதிகளிலும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு பல தரப்பினராலும் ஒருங்கமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்றும் இன்றும் வடக்கு, கிழக்கு மாவட்டங்கள் பலவற்றிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன் மற்றோர் அங்கமாகவே முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஊர்தி மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு சென்று, மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தினூடாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை எதிர்வரும் மே 18ஆம் திகதி வந்தடையும் என பவனி ஏற்பாட்டாளர்களான தாயக நினைவேந்தல் அமைப்பினர் தெரிவித்தனர்.