Friday, December 27, 2024
HomeIndia1,000 ஆண்டுகள் பழமையான கோயிலில் சீரமைப்பு பணிகள் நிறைவு !

1,000 ஆண்டுகள் பழமையான கோயிலில் சீரமைப்பு பணிகள் நிறைவு !

ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொன்மார் பெருமாள் கோயில் தற்போது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பிரயோகச் சக்கரத்துடன் தியாக விநோத பெருமாள் என்ற பெயரில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார். இந்த கோயிலுக்கு வரும் ஜூன் 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேடவாக்கம்-மாம்பாக்கம் நெடுஞ்சாலையில் தாம்பரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது பொன்மார். பொன்மாரின் பிரதான சாலையில் இருந்து சில மீட்டர் தொலைவிலேயே சேதமடைந்த நிலையில் கோயில் ஒன்று இருந்தது. இந்தக் கோயில் தற்போது வேக வேகமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

கருங்கல்லால் ஆன சுற்றுச் சுவர், பழைய கோயில்களை புதுப்பிப்பது போலவே செப்புக் கம்பிகள் பயன்படுத்தி புதுப்பிப்பது என்று பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த பணிகள் குறித்து கோயில் நிர்வாகிகளிடம் கேட்டபோது, “இந்தக் கோயில் தேவி, பூதேவி சமேத தியாக விநோத பெருமாள் கோயில். இந்தக் கோயில் 60 அடி நீளம், 32 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. கோயில் விமானம் உள்ள பகுதி மட்டும் 22 அடி நீளம், 14 அடி அகலத்தில் உள்ளது.

ஐந்தரை அடியில் பெருமாள் சிலையும், ஐந்தே கால் அடியில்  தேவி, பூதேவி சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. எதிரே கருடன் சந்நிதி அமைக்கப்படுகிறது. கோயில் விமானத்தில் பெருமாளின் அவதாரங்கள் உட்பட 108 சிலைகள் அமைக்கப்படுகின்றன” என்றனர்.

இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “தியாக விநோத பெருமாள் கோயில் சுமார் 800 முதல் 1,100 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். பொன்மார் கிராமம் ஒரு காலத்தில் தியாக விநோத நல்லூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் பெயரிலேயே இந்த ஊர் இருந்திருக்கலாம்.

ஊரில் ஒருவர் தன் கனவில் தோன்றிய கோயில் குறித்து கூறியதும், முக்கிய பிரமுகர்கள் சிலர் இதுதொடர்பாக மேலும் சில தகவல்களை திரட்ட முற்பட்டனர். இக்கோயிலில் சிலைகள் எதுவும் இல்லை. இங்குள்ள கருடன் உருவத்தை வைத்து இது பெருமாள் கோயிலாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. வரலாற்று குறிப்புகளையும், அந்தக் கிராம பெரியவர்களின் செவி வழிச் செய்திகளையும் வைத்து தியாக விநோத பெருமாள் கோயில் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் பெருமாள் பிரயோகச் சக்கரத்துடன் அருள்பாலிக்க உள்ளார். வழக்கமாக பெருமாள் கோயில் இருக்கும் சக்கரத்தைப்போல் இல்லாமல் இது நேராக இருப்பது தனிச்சிறப்பு” என்றனர்.

ஜூன் 5-ல் கும்பாபிஷேகம்: தற்போது இக்கோயிலில் 80 சதவீத சீரமைப்புப் பணிகள் முடிந்துவிட்டன. இதைத் தொடர்ந்து ஜூன் 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 80562 74746, 87786 93401 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments