இசை கலைஞரும், நடிகருமான ஹிப் ஹொப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘மரகத நாணயம்’ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் ஏ. ஆர். கே. சரவணன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘வீரன்’.
இதில் ஹிப் ஹொப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஆதிரா ராஜ் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் காளி வெங்கட், முனீஸ்காந்த், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் டி. மேனன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.
சுப்பர் ஹீரோ ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஃபர்ஸ்ட்லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த திரைப்படம் ஜூன் மாதம் இரண்டாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.
இதனிடையே இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹொப் ஆதி தமிழா ஆண்டிற்கு ஒரே ஒரு திரைப்படத்தை வெளியிட்டாலும், கடந்த நான்காண்டுகளாக அவர் வணிக ரீதியான வெற்றியை வழங்காததால், அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரன்’ திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே வரவேற்போ… ஆதரவோ… இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.