நடிகர் அருள்நிதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘ராட்சசி’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் சை. கௌதம் ராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.
இதில் அருள்நிதி கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், முனிஸ்காந்த், ராஜசிம்மன், சாயாதேவி, யார் கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத் குமார் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே தொடர்ந்து ஹாரர் திரில்லர் படங்களை தெரிவு செய்து நடித்து வரும் அருள்நிதி, முதன்முறையாக கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னர் திரைப்படத்தில் நடித்திருப்பதால் இந்த திரைப்படம் அவருக்கு வணிக ரீதியிலான வெற்றியை அளிக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.