ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நேற்றிரவு (11) கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில் பவர்-ஹிட்டிங்கில் மாஸ்டர் கிளாஸை உருவாக்கினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தின் போது இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த சாதனையை அவர் படைத்தார்.
ஜெய்ஸ்வால் வெறும் 13 பந்துகளிலே அரை சதம் அடித்தார்.21 வயதான தொடக்க ஆட்டக்காரர் இன்னிங்ஸின் முதல் மூன்று ஓவர்களிலேயே தனது அரைசதத்தை எட்டினார்.
இதன் மூலம் பேட் கம்மின்ஸ் மற்றும் கே.எல். ராகுலின் ஐ.பி.எல். தொடரில் அதிவேக அரைசதம் (14 பந்துகள்) என்ற சாதனை முறியடிக்கப்பட்டது.
ஜெய்ஸ்வால் இந்த சீசனில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக மிகவும் பெறுமதி வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் இந்த சீசனில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.12 போட்டிகளில், இடது கை தொடக்க ஆட்டக்காரர் 575 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் அவர் மொத்தமாக 47 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 98 ஓட்டங்களை பெற்றார்.
ஜெய்ஸ்வாலை இந்திய தேசிய அணியில் இணைத்துக் கொள்வதற்கான யோசனைகள் ஏற்கனவே எழுந்துள்ளன. மேலும் நேற்றிரவு ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக அவரின் துடுப்பாடத்தைத் தொடர்ந்து அதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதனிடையே இந்தியாவின் முன்னாள் சகலதுறை வீரர் சுரேஷ் ரய்னா ஜியோ சினிமாவில் இது குறித்து பேசுகையில், தான் தேர்வாளராக இருந்தால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை உடனடியாக ஒருநாள் உலகக் கிண்ண இந்திய அணியில் சேர்த்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
2023 ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் உலகக் கிண்ணம் எதிர்வரும் ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.