கம்பளை, எல்பிட்டிய பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 22 வயதுடைய யுவதி, கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவரின் சடலத்தைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த மே மாதம் 07 ஆம் திகதி வேலைக்குச் செல்லும் போது பாத்திமா முனவ்வரா என்ற மேற்படி யுவதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதான சந்தேக நபர் குறித்த பகுதியில் ஆடுகளை வளர்க்கும் இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது ஆடுகளுக்குப் புல் எடுக்கும் போது குறித்த யுவதியை அவதானித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு யுவதி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குறித்த நபர், காட்டுக்குள் இழுத்துச் சென்று யுவதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகின்றது.
யுவதியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது உடல் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்றுள்ள பொலிஸார், அங்கு யுவதியின் சில உடமைகளை கண்டுபிடித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.