பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஆகியோர் வவுனியா நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.
வவுனியா – வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் அண்மையில் உடைத்து அழிக்கப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது.
எனினும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்ட போது நீதிமன்ற உத்தரவு கருத்தில் கொள்ளப்படாமல் தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக தெரிவித்து நெடுங்கேணி பொலிசாரால் ஆலய பூசாரியும், நிர்வாக உறுப்பினர் ஒருவரும் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். எனினும் குறித்த வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும் பூசாரியும் இருப்பதனால் அதே வழக்கில் அவர்களை சந்தேக நபர்களாக பெயரிடுவது வழக்கிற்கு முரனாக அமையும் என்பதை சுட்டிக்காட்டிய நீதவான் வழக்கிலிருந்து அவர்களை விடுவித்திருந்தார்.
அத்துடன் ஆலயத்தில் கட்டுமானங்களையோ மாற்றங்களையோ ஏற்ப்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பூஜை வழிபாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இதேவேளை இறை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை விரைந்து எடுக்குமாறும் பொலிசாருக்கு பணிக்கப்பட்டது.