பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடிகை சோனம் கபூர் பேசியது அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடிகர் தனுஷ் உடன் ‘ராஞ்சனா’ படத்தில் நடித்தவர் சோனம் கபூர். பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டிக்கொண்டதை ஒட்டி, விண்ட்சர் கோட்டையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இதில் நடிகர் டாம் குரூஸ் உட்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர்.
விழாவில் ‘நமஸ்தே’ என கூறி தனது உரையை தொடங்கிய சோனம் கபூர், “நமது காமன்வெல்த் கூட்டு ஐக்கியமாகும். உலக மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர், உலகப் பெருங்கடலில் மூன்றில் ஒரு பங்கு, உலக நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு நாம் ஒன்றாக இருக்கிறோம். நமது ஒவ்வொரு நாடும் தனித்துவமானது. நம் மக்கள் ஒவ்வொருவரும் சிறப்பு வாய்ந்தவர்கள். ஆனால் நாங்கள் இதில் எங்களை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறோம். அனைவருக்கும் அமைதியான, நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க காமன்வெல்த் உறுதிபூண்டுள்ளது. இங்கு ஒவ்வொருவரது குரலும் கேட்கப்படுகிறது” என பேசி இருந்தார்.
இதனை அவரது தாயார் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். ‘மிகப் பெருமை’ என கேப்ஷனும் கொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த வீடியோ பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் சோனம் கபூரை பாராட்டி இருந்தனர். அதேநேரத்தில், சிலர் அவரது உச்சரிப்பு குறித்து விமர்சித்திருந்தனர்.