Saturday, December 28, 2024
HomeUncategorizedஇஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜர் - கலவரக்காரர்கள் 1000 பேர் கைது

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜர் – கலவரக்காரர்கள் 1000 பேர் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னதாக நேற்று அவர் ரேஞ்சர் எனப்படும் துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் கலவரம் வெடித்தது. இதனை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் நாட்டின் பல இடங்களில் வன்முறை அரங்கேறியது. இதனால் 1000-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் இம்ரான்கானை 14 நாட்கள் காவலில் எடுப்பதற்கான கோரிக்கையை அதிகாரிகள் நீதிபதியிடம் வைக்க உள்ளனர் என்றும் அதிகாரிகளின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்ரான் கான் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார்.

பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் தற்போது காதிர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் பாகிஸ்தான் காவல் துறை தெரிவித்துள்ளது. இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான காதிர் அறக்கட்டளை மூலம் ரூ.5,000 கோடி ஊழல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் இம்ரான்கானை கைது செய்ய ஊழல் தடுப்பு ஆணையம் மே 1-ம் தேதி உத்தரவு பிறப்பித்ததாகவும் இதைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments