Home Srilanka இனப்பிரச்சினை தீர்வு குறித்து இன்று பேச்சு ஆரம்பம்

இனப்பிரச்சினை தீர்வு குறித்து இன்று பேச்சு ஆரம்பம்

0

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதிக்கும் வட – கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான 3 நாட்கள் தொடர் பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை (11) ஆரம்பமாகின்றன.

அதிகாரப்பகிர்வு, வடக்கு அபிவிருத்தி, வடக்கில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்புவிடுத்திருந்த நிலையில், அச்சந்திப்பு வியாழக்கிழமை (11) ஆரம்பமாகி எதிர்வரும் சனிக்கிழமை (13) வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இச்சந்திப்புக்களில் ஆராயப்படவேண்டிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் செவ்வாய்கிழமை (9) ஜனாதிபதிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அதனையடுத்து இச்சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அதன்படி இன்றைய தினம் நடைபெறவுள்ள சந்திப்பில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணிப்பிரச்சினை, பயங்கரவாதத்தடைச்சட்டம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பன உள்ளடங்கலாக நல்லிணக்கம் சார்ந்த விவகாரங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு இன்னமும் உறுதியாகவில்லை.

அதேவேளை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இச்சந்திப்பில் தான் கலந்துகொள்வதாக அறிவித்திருப்பதுடன் இதன்போது தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் உடனடி மற்றும் நீண்டகாலப்பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஒற்றையாட்சியைக் கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி தயாரெனின் அதில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, திலீபன் மற்றும் பிள்ளையான் ஆகியோரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version