ஆளுநர்களின் நியமனம், பதவி நீக்கம் என்பன எம்முடன் தொடர்புடைய விடயமல்ல. அவை முழுமையாக அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளவையாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிபருக்கு மாத்திரம் உள்ள அதிகாரம்
ஆளுநர்கள் அதிபரின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுபவர்களாவர். எனவே அது குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கான முழுமையான உரிமையும் , அதிகாரமும் அவருக்கு மாத்திரமே காணப்படுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வடமேல், கிழக்கு , சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாண ஆளுனர்களை பதவி விலகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.