ஐ.நா. கூட்டத்தில் ‘கைலாசா’ பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி?

பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். அவர் தனது ஆசிரமத்தை ‘கைலாசா’ என்ற தனி நாட்டில் உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். ஆனால், இந்த இடம் பற்றி பல ஊகங்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த மாதம் 24-ம் தேதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக, மற்றும் காலாச்சார உரிமைகள் குழு கூட்டம் நடந்துள்ளது. இதில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்துகொண்டனர். இந்த போட்டோக்கள் நித்தியானந்தாவின் டிவிட்டர்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ‘முடிவெடுக்கும் விஷயங்களில் பெண்களுக்கு சம உரிமை’என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அனைத்து மகளிர் குழு பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் நிலையான வளர்ச்சிக்கு கைலாசா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அந்த பெண் பிரதிநிதி பேசுகிறார்.
உணவு, இருப்பிடம், உடை, கல்வி, மருத்துவ சிகிச்சை போன்றவை கைலாசாவில் இலவசமாக வழங்கப்படுகிறது. பழமையான இந்துமத பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வர விரும்பும்இந்து மத தலைவர் நித்யானந்தாவுக்கு தொந்தரவு அளிக்கப்படுகிறது. சொந்த நாட்டிலேயே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த தொந்தரவை தடுத்த நிறுத்த தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அங்கீகாரம் பெறாத கைலாசா: ஐ.நா அமைப்பில் 193 நாடு களுக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது. இதில் கைலாசா இடம் பெறவில்லை. இதில் இடம் பெற ஐ.நா பாதுாப்பு கவுன்சில் மற்றும் பொது சபை அனுமதி வேண்டும்.
ஆனால் ஜெனிவாவில் உள்ளஐ.நா மனித உரிமைகள் அமைப்பு,தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேசஅனுமதிக்கிறது. இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ளார்.