மாணவர்களுக்கு சிறந்த கற்றல் திறனை மாநில கல்வி கொள்கை வழங்கும்

தமிழக மாணவர்களுக்கு சிறந்த அறிவு மற்றும் கற்றல் திறனை வழங்கும் விதமாக மாநில கல்விக் கொள்கை இருக்கும் என்று அதன் வடிவமைப்புக் குழு உறுப்பினரும் முன்னாள் துணைவேந்தருமான ஜவகர் நேசன் தெரிவித்தார்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவித்தது. இந்த மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக இந்தக் குழுவினர் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கடந்த 7 மாதங்களாக கருத்துகளை கேட்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிக்கப்பட்டு மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்நிலையில், மாநில கல்விக்கொள்கை குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினரும், முன்னாள் துணைவேந்தருமான ஜவகர் நேசன், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஜூன் மாதம் வரைதமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது. அதற்கு முன்னதாகவே பணிகளை முடிப்பதற்கு திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம். எனினும், தேவைப்பட்டால் தமிழக அரசிடம் கால நீட்டிப்பு கோரப்படும். தமிழகத்தில் கல்வியில் முழுமையாக மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலைஉள்ளது. மாணவர்கள் சிந்திக்கும் வகையில் அறிவுத்திறன் உள்ளவர்களாக வருவதற்கு ஏற்ப கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம்.

5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைக்க வேண்டும் என எந்தசட்டத்திலும் கூறவில்லை. அதனால்அதை ஏற்க முடியாது. தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் இருக்கின்றன. அதிலுள்ள சில அம்சங்களால் அதை ஏற்பதில் நமக்கு சிரமம் உள்ளது.

மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயாரான பின்பு அதன்மீது பொதுமக்களின் கருத்துகள் கேட்டு ஏற்புடைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். தமிழக மாணவர்களுக்கு சிறந்த அறிவு மற்றும் கற்றல் திறனை வழங்கும் விதமாக மாநில கல்விக் கொள்கை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Please follow and like us: