உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி படுதோல்வி அடைவார்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சகல அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அரச நிறுவனங்கள் ஊடாக தேர்தலுக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பொதுஜன பெரமுன தரப்பினர் படுதோல்வி அடைவார்கள் என  பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரச நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அரச நிறுவனங்கள் ஊடாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு எரிபொருள் விநியோகிப்பது சிக்கலானது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பினர் தேர்தல்கால செலவுகளை பன்மடங்கு மதிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது கடினம் என்று அரச நிறுவனங்கள் ஊடாக குறிப்பிடும் நிலையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறானதொரு தன்மை முன்னொருபோதும் இடம்பெறவில்லை.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதை தடுக்க அரசாங்கம் மேற்கொள்ள சூழ்ச்சிகள் இல்லை என்று குறிப்பிட வேண்டும். எல்லை நிர்ணய ஆணைக்குழு, தேர்தல் ஒழுங்குப்படுத்தல் சட்டம், கட்டுப்பணம் செலுத்தலை பொறுப்பேற்பதை தடுக்கும் வகையிலான சுற்றறிக்கை உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்தது.

ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்ப நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை தீர்மானிக்க முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் காலத்திற்கு காலம் நடத்தப்பட வேண்டும். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எமக்கு முழுமையாக உள்ளது.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் படுதோல்வியடையும் என்பதை உறுதியாக குறிப்பிடுகிறோம் என்றார்.

Please follow and like us: