புதிய பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 9வது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக இன்று(08) ஆரம்பமாகிறது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் புதிய அமர்வின் ஆரம்ப விழாவை சிக்கனமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தகவல் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி முப்படைகளின் மரியாதை அணிவகுப்பு, மரியாதை வேட்டுக்களைத் தீர்த்தல் மற்றும் வாகன பேரணிகளை நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 33ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தையும் ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் வெளியிடுவார்.
வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், பாதுகாப்பு செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி ஜனாதிபதியினால் பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டது.
இன்று இடம்பெறவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தி கலந்து கொள்ளப் போவதில்லை என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சியாக தமிழ் முற்போக்கு கூட்டணி, இதில் கலந்துகொள்ளும்.
டலஸ் அழகப்பெரும அணியின் உறுப்பினர்களும் அமர்வைப் புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை புறக்கணிக்க சுதந்திர மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.