மே 9 வன்முறை குறித்த கரன்னாகொட அறிக்கை பொது ஆவணமாக்கப்பட்டுள்ளது

நாட்டில் கடந்த ஆண்டு இடம்பெற்ற மே 9 வன்முறைகளின் போது கடமைகளை நிறைவேற்றத் தவறிய பாதுகாப்பு தரப்பினர் தொடர்பான கரன்னாகொட அறிக்கை  நீதிமன்றத்தினால் பொது ஆவணமாக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த அறிக்கையை சகலரும் பார்வையிட முடியும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தலைமையிலான குழுவின் அறிக்கை பெப்ரவரி 24ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாமை தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றத்திலும் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதா என வினவிய போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் உலக ஜனநாயகத்தில் ஏற்பட்ட மிக மோசமானவையாகும். பாராளுமன்ற உறுப்பினரொருவர் அவரது பாதுகாவலருடன் கொல்லப்பட்டதோடு மாத்திரமின்றி , மேலும் 72 பாராளுமன்ற உறுப்பினர்களது இல்லங்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.

இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாம் நீதிமன்றத்திடம் கோரியிருந்தோம்.

இந்நிலையில் இந்த சம்பவங்களின் போது தமது கடமைகளை நிறைவேற்றத்தவறிய பாதுகாப்பு தரப்பினர் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தலைமையில் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

இக்குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை நீதிமன்றத்தினால் பொது ஆவணமாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அறிக்கையை சகலரும் படிக்க முடியும் என்றார்.

Please follow and like us: