அமெரிக்க இராஜதந்திர தூதுக்குழுவின் திடீர் விஜயம் குறித்து அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்

அமெரிக்க இராஜதந்திர தூதுக்குழுவின் திடீர் வருகைக்கான காரணம் என்ன என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
ஜே.வி.பி. ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் அதேவேளை, அவற்றை இந்திய, அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் முடக்குவதற்கு அரசாங்கம் தயாராகிக்கொண்டிருக்கிறது.
இதன் பிரதிபலன் 1983 கலவரத்தை விட மோசமானதாகவே இருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மாத்தறையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இறையாண்மையில்லா எமது நாட்டில் 27 கோடி செலவில் சுதந்திர கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. எமக்கு கொண்டாடுவதற்கு சுதந்திரமும் இல்லை; இறையாண்மையும் இல்லை.
கடந்த வாரம் இந்து – பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி றொயல் தலைமையிலான தூதுக்குழுவின் திடீர் இலங்கை விஜயம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இந்த தூதுக்குழுவில் 29 பேர் விஜயம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், வந்தவர்கள் யார் என்பது எமக்கு தெரியாது. அவர்கள் எதற்காக வருகை தந்தனர், உயர்மட்ட சந்திப்புக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன என்பதும் யாருக்கும் தெரியாது.
அமெரிக்கா, நேட்டோ மற்றும் ரஷ்யா என்பவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் பிரதிபலனாக உலகில் பாரிய ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுடன் சிறந்த உறவை பேணுபவராவார்.
நாம் தினத்தை கூறுகின்றோம். வீதிக்கு இறங்கிப் போராட தயாராகுங்கள் என்று ஜே.வி.பி. கூறுகின்றது. ஆனால், தான் ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்சப் போவதில்லை என்றும், சட்டத்துக்கமையவே செயற்படுவதாகவும் மறுபுறம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதே போன்ற சூழலிலேயே 1983ஆம் ஆண்டுகளில் கலவரம் ஏற்பட்டது.
1982இல் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது தடை விதிக்கப்பட்டு இறுதியில் 60,000 பேர் கொல்லப்பட்ட பின்னரே அனைத்து கலவரங்களும் அடங்கின. இதன்போது படலந்த முகாம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ரணில் விக்ரமசிங்க உள்ளாகியுள்ளார்.
இன்று 60,000 பேர் கொல்லப்பட்டதன் மறுபக்கம் இடம்பெறவுள்ளது. ஜே.வி.பி. மற்றும் ஜனாதிபதியின் கருத்துக்களின் பிரதிபலன் இறுதியில் எங்கு சென்று நிறைவடையும் என்று தெரியாது. தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட வேண்டும்.
அவ்வாறில்லையெனில், இதற்கெதிரான போராட்டங்களை அமெரிக்க, இந்திய இராணுவத்தினரை கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு நாட்டில் குழப்ப சூழல் இடம்பெற வாய்ப்பளித்துவிடக் கூடாது என்றார்.