துறைசார் உயர் அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் உறுதி  

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தடைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

அதற்கமைய குறிப்பிட்ட காலத்திற்குள் வாக்குசீட்டுக்களை வழங்குவதற்கும் , அரச அச்சகத்திற்கான பாதுகாப்பினை வழங்குவதற்கும் , எரிபொருட்களை வழங்குவதற்கும் துறைசார் உயர் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கமைய , பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த தரப்பினரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து, திட்டமிட்ட தினத்தில் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தடைகளை நீக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய அந்தக் கலந்துரையாடலில் குறித்த அரச நிறுவனங்களுடன் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

அதற்கமைய அரச அச்சகமா அதிபரினால் தபால் மூல வாக்கெடுப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குசீட்டுக்களை 5 நாட்களுக்குள்ளும், ஏனைய வாக்குசீட்டுக்களை 20 – 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியும் என்றும் , அதற்கு தேவையான நிதியை நீதிமன்ற தீர்ப்பிற்கமைய நிதி அமைச்சிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு சீட்டுக்கள் அச்சிடப்படும் போது அரச அச்சகமா அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் தேவையான தினம் தொடர்பான தகவல்களை பொலிஸ்மா அதிபருக்கு வழங்குமாறும், அற்கமைய தேவையான பாதுகாப்பினை வழங்க முடியும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் (தேர்தல்) அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய தேர்தலின் போது தேவையான எரிபொருளை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் அதிகாரிகளால் எதிர்வரும் சில தினங்களுக்குள் வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: